வவுனியா குடும்பஸ்தர் மீது பேருந்து சக்கரம் ஏறி பரிதாப மரணம்

பொகவந்தலாவ பேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதே இந்த உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, பேருந்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு அதன் சாரதி கீழே இறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, பேருந்தின் தடையாளி சரியாக செயல்படாததால் பேருந்து முன்னோக்கி நகர்ந்து, அதன் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது சக்கரம் ஏறியதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நோர்வூட் சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவராகவும், தற்போது வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழாய் நீர் அகழும் பணிக்காக தனது குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வந்திருந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொகவந்தலாவ பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




