
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, வி. பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சிவசாஸ்திரி என்பவரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இரண்டாவது மகள், ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த விடயம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, மாணவி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு கரசானூரில் உள்ள பாடசாலையில் 10ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், மாணவி தொடர்ந்து குறித்த இளைஞருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகக் கூறப்படும் நிலையில், தந்தை அவரைக் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவியின் தாயார் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ராணிப்பேட்டைக்குச் சென்றிருந்தார். இரவு வீட்டில் தந்தையும் இரண்டாவது மகளும் இருந்த நிலையில், மூத்த மகளை அருகிலுள்ள சித்தப்பா வீட்டில் தூங்குமாறு தந்தை அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மகளிடம் காதலைக் கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை அறிவுறுத்தியுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர், மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் தனது சகோதரருக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகளைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சகோதரர், மாணவியை வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், மகளைக் கொலை செய்ததாகக் கூறி சிவசாஸ்திரி வானூர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!