10 கோடிக்கும் மேல் பணம் பெற்று குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக வவுனியா வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

வவுனியாவில் நகை வியாபாரம் செய்து வந்த வர்த்தகர் ஒருவர் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பலரிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கை பகுதியில் வசித்து வந்த இவர், “கௌரி யுவலர்ஸ்” என்ற பெயரில் நகை வியாபாரம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இளையதம்பி சுகுமார் (41) என்பவரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வவுனியாவில் பல நகைக் கடைகளுக்கு நகைகளை விநியோகித்து வந்ததுடன், பல வர்த்தகர்களுடன் நிதி கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கோ அல்லது 0774101802 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




