திருகோணமலை நீதிமன்ற வழக்கு ஏடு திருட்டு: சந்தேகநபர் விளக்கமறியலில்

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடியதாகக் கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்படி, நிலம் தொடர்பான வழக்கு ஒன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்குக்குரிய பதிவு ஏட்டை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பதிவாளருடன் ஏற்பட்டிருந்த முரண்பாட்டின் காரணமாக அவரை பழிவாங்கும் நோக்கில் சந்தேகநபர் குறித்த வழக்கு பதிவு ஏட்டினை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வழக்குடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 30 வயதுடைய பெண் தட்டச்சாளரை 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெண்ணுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




