முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் இலங்கைக் கடற்படை, வான்படை மற்றும் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களின் எட்டு மீன்பிடிப் படகுகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 26ஆம் திகதி காலை 7.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களே இதுவரை கரைதிரும்பவில்லை.
முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜூட் (26), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ புஷ்பராஜா (42) மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் (48) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
குறித்த கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடல்வழித் தேடுதலுக்கு மேலதிகமாக வான்வழித் தேடுதலையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (28) காலை முதல் இலங்கை வான்படையினர் ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, கடற்படையினரின் படகுகளுடன் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான எட்டு மீன்பிடிப் படகுகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடற்றொழிலுக்குச் சென்று இரண்டு நாட்களாகியும் மூன்று மீனவர்களும் கரைதிரும்பாத நிலையில், அவர்களின் நிலை குறித்து உறவினர்களும் சக மீனவர்களும் கவலை அடைந்துள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




