பொலிஸார் துரத்திய மோட்டார் சைக்கிள் விபத்து – யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரைத் துரத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடி பகுதியில், பொலிஸார் துரத்திய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் செல்ல முயன்ற நபரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




