ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்; எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டு நடுக்கடலில் செயலிழப்பு

ஓமன் அருகே ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத எறிபொருளால் தாக்கப்பட்டு செயலிழந்துள்ளது.
ஓமனின் அஷ் ஷிஷாஹ் பகுதியில் இருந்து சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக UKMTO தெரிவித்துள்ளது. தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறை கடுமையாக சேதமடைந்ததுடன், கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தாக்குதலால் கடலில் எண்ணெய் கசிவு அல்லது வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




