இந்தியாசெய்திகள்

காதலை நிராகரித்த இளம்பெண் பேருந்து நிலையத்தில் வெட்டிக்கொலை – கர்நாடகாவில் அதிர்ச்சி

Desktop Image Mobile Image

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் பண்ட்வால் தாலுகா, கொடங்கே பகுதியைச் சேர்ந்த லாவண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, லாவண்யாவை அவரது தூரத்து உறவினரான சேத்தன் (25) ஒருதலைக் காதலித்து வந்துள்ளார். எனினும், அவரது காதலை லாவண்யா ஏற்க மறுத்ததுடன், தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நேற்று (16) மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த லாவண்யா, பேருந்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த சேத்தன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்து தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சமடைந்த லாவண்யா பேருந்திலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்ற போதும், சேத்தன் அவரை துரத்திச் சென்று பேருந்து நிலைய வளாகத்திலேயே பலமுறை வெட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

படுகாயமடைந்த லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஆயுதத்தை அங்கேயே வீசிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தலைமறைவாகியுள்ள சேத்தனை கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button