
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் மீண்டும் பதிவாகி வருவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றுக்குள்ளான பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இந்த நோயின் பரவலைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த வருடம் சில பகுதிகளில் மீண்டும் நோய் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்தே பொதுமக்களுக்கும் பன்றிப் பண்ணை உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குறித்த 48 பண்ணைகளிலிருந்தும் சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தாய் பன்றிகள் மற்றும் வளர்ப்புப் பன்றிகளின் இறப்புகள் தொடர்பான பரிசோதனைகளிலும் நோய் நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய மருத்துவர் பிரதீப் குமாரவடு, அதற்காக அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நோயின் பரவலைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




