இந்தியாவுக்கு எதிராக அபார சதம்; இலங்கையை சரிவிலிருந்து மீட்ட சொனல் தினுஷ

கொழும்பில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் இளம் வீரர் சொனல் தினுஷ அபார சதம் விளாசி, அணியை இன்னிங்ஸ் தோல்வி அபாயத்தில் இருந்து மீட்டுள்ளார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திய நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் முன்வரிசை விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
இந்நிலையில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய சொனல் தினுஷ, அணியின் சரிவை தடுத்து நிறுத்தி அபாரமாக சதம் விளாசினார்.
208 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
முதல் இன்னிங்ஸிலும் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த சொனல் தினுஷ, ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனைக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நெருக்கடியான கட்டத்தில் கேசர நுவந்தவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்ட தினுஷ, இலங்கை அணியின் மீட்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
கேசர நுவந்த 46 ஓட்டங்களைப் பெற்றார்.
136 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை இலங்கை அணி கடந்து, தற்போது 174 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.




