அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

கடுவலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (19) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸாரும் கோட்டே தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், கட்டடத்தின் மேல் மாடியில் சோதனையிட்ட தீயணைப்புப் படையினர், அங்கிருந்த கட்டிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
நச்சுப் புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் தலாஹேன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், கடந்த சில நாட்களாகக் கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்புற அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் உறங்கிய அறையின் வெளியேறும் கதவு திறக்க முடியாத வகையில் முழுமையாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்கசிவு காரணமாகத் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்தைத் தடயவியல் பொலிஸார் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடுவலை நீதவானும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று (20) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!