ஓமானில் உயிரிழந்த வவுனியா பெண் – ஒரு மாதத்தின் பின் உடல் நாடு திரும்பியது

குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல்களின்படி, வெளிநாட்டில் பணியாற்றி வந்த அவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். எனினும் கடந்த மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் அவரிடமிருந்து எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த அவரது கணவர் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
சில நாட்களுக்குப் பின்னர், குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர் அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அவரது உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மேலதிக சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமையைப் போக்குவதற்காக வெளிநாடு சென்ற தாய் ஒருவர் சடலமாக நாடு திரும்பியுள்ளமை, அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மட்டுமன்றி அப்பகுதி மக்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற குடும்பத்தினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




