அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 103 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சில தொகுதிகளில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை குதிரை பேரத்தின் அடிப்படையில் இழுக்க திமுக, அதிமுக முயற்சி செய்யலாம் என விஜய்க்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், ‘வெற்றி பெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் பனையூருக்கு வந்துவட வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்’ என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியை தவெகவினர் தயார் செய்து வைத்துள்ளதாகவும்,வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி, வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக வைக்க பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் 100 பேர் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்களை அந்த இடத்துக்கு அழைத்து வரும் முக்கிய பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இல்லம் செல்லும் வழியில் கபாலீஸ்வரர் நகரில் வாகனங்களை உள்ளே விட பொலிஸ் அனுமதி மறுத்துள்ளது.
அதேபோல், “விஜய் வெளியே சென்றால் வாகனத்தை பின்தொடர கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும். ரசிகர்கள் அதிக அளவில் கூட கூடாது. இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அக்கறை முதல் நீலாங்கரை வரை 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்” என்றும் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



