
இலங்கையின் தலைமன்னார் மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சுமார் 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி ரகப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 17ஆம் திகதி வடமத்திய கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, படகிலிருந்த மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோகிராம் 410 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதுடன், படகும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின்போது டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, படகின் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த தங்கம் கடல் மார்க்கமாக தென்னிந்தியாவுக்குக் கடத்தப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!