
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளை முட்டையின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதாரக் குறிகாட்டி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட கடந்த இரு வாரங்களுக்கான அறிக்கைகளில் இந்த விலை மாற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதற்கமைய, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை, நவம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 ரூபாய் 60 சதமாகப் பதிவாகியிருந்தது.
எனினும், நவம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்த விலை 675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரே வாரத்தில் 147 ரூபாய் 40 சதம் அல்லது சுமார் 27.9 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
இதேவேளை, புறக்கோட்டை சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் சராசரி சில்லறை விலை 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு வாரத்தில் 4 ரூபாய் 07 சதம் அல்லது சுமார் 10.8 சதவீத உயர்வாகும்.
மேலும், நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் ஒரு கிலோகிராம் சராசரி சில்லறை விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்படி, 120 ரூபாய் அல்லது 17.1 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அங்கு வெள்ளை முட்டை ஒன்றின் விலையும் 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், புறக்கோட்டை சந்தையில் சில மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சியின் சராசரி சில்லறை விலை 580 ரூபாயிலிருந்து 560 ரூபாயாகவும், கோவாவின் விலை 720 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!