2027ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் சீனாவின் பறக்கும் மின்சார வாகனம்!

எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பறக்கும் மின்சார வாகனத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சீனாவின் எக்ஸ்பெங் (XPeng) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லிஸ்பனில் நடைபெற்ற வலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் பறக்கும் வாகனப் பிரிவின் தலைமை நிர்வாகி டெலி ஜாவோ, இந்தத் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பறக்கும் வாகனம் வழக்கமான கார்களைப் போன்று சக்கரங்களைக் கொண்டிருக்காது. மாறாக, ஆறு மின்சார விசிறிகளின் உதவியுடன் செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோமீற்றர் உயரம் வரை பறக்கக்கூடிய இந்த வாகனம், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் சுமார் 30 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜாய்ஸ்டிக் மூலம் இதனை இயக்க முடிவதுடன், குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தானாகவே பறக்கும் வசதியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை இயக்குவதற்கான அடிப்படைப் பயிற்சியை ஐந்து நிமிடங்களில் வழங்க முடியும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இந்தப் பறக்கும் வாகனத்தையும் அதனை எடுத்துச் செல்லும் ஆறு சக்கரங்களைக் கொண்ட தரை வாகனத்தையும் உள்ளடக்கிய தொகுப்பின் விலை சுமார் 300,000 அமெரிக்க டொலர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இதன் பயன்பாடு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மட்டுமன்றி, அவசரகால மீட்புப் பணிகளுக்கும் இதனைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவில் சுமார் 20 நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது சந்தையை விரிவுபடுத்த எக்ஸ்பெங் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!