மட்டக்களப்பு மாமாங்கத்தில் குரங்குகள் அட்டகாசம்; ஐந்து பேர் படுகாயம்!

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி, இதுவரை ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குரங்குகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக, பகல் வேளையில்கூட வீடுகளைப் பூட்டிக்கொண்டு அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாகக் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகள், வீடுகளின் வளாகங்களில் உள்ள மா, பலா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழமரங்களின் பழங்களைச் சேதப்படுத்தி உண்பதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் சீற்றுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து பேர் குரங்குகளின் கடிக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, குரங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!