யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம், மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (30) 28ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளது.
மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுத் தமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வழங்குமாறு மக்கள் வலியுறுத்தினர்.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள், 36 ஆண்டுகள் கடந்தும் பூர்வீக வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புக் காணிகள் மட்டுமன்றி, விவசாய நிலங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய சொத்துக்களையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பல தசாப்தங்களாகத் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமக்கு வெறும் வாக்குறுதிகள் வழங்கப்படுவதற்குப் பதிலாக, காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மயிலிட்டி மக்களின் நில உரிமைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தமது பூர்வீகக் காணிகள் மீளக் கிடைக்கும் வரை உரிமைக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதே மயிலிட்டி மக்களின் நிலைப்பாடாக உள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




