
மொனராகலை – வெள்ளவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடா ஓயா வித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்றும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியைச் செலுத்திய 45 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சாரதி, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் உயிரிழந்தவரும் காயமடைந்த சாரதியும் ஹதபானாகல, புபுதுவெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெள்ளவாய பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியின் 36 வயதுடைய சாரதி, அம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




