
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேர் மற்றும் விடுவிக்கப்பட்ட 9 பேர் உள்ளிட்ட 24 பேரும் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலை பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar நீதிபதிகள் குழாம் வழங்கிய தீர்ப்பில் 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதுடன், 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் ஒரே அளவிலான தண்டனை வழங்கப்படவில்லை. ஒருவருக்கு 260 ஆண்டுகளும், நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகளும் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குற்றவாளிகள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 24 பேரும் சிறைச்சாலை பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, சிலர் தீர்ப்பு தொடர்பில் தமது அதிருப்தியை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வழக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்றதுடன், 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வழக்கில் அரச தரப்பு சார்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தனர்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், CCTV பொருத்தப்பட்ட பொலிஸ் வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




