வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா 31 மில்லியன் டொலர் உதவி

பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு சுமார் 31 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த நிதியின் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 1,027 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததுடன், பெருமளவான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் பாலங்களை மீளமைத்தல், பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அமெரிக்கா அறிவித்துள்ள புதிய நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே நேபாளத்துக்கு 34 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய நிவாரணப் பொருட்களை அமெரிக்கா வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்கால பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் 13 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ட்ரோன்களை நேபாளத்துக்கு வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




