மாலதி நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கஜேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பொலிஸ் அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் செயற்பாட்டாளரான செல்லத்துரை பொன்குணரத்தினம் ஆகியோரை விசாரணைக்காக முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைத்துள்ளனர்.
கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் பொலிஸாரால் கடிதம் மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று (19) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, செல்வராசா கஜேந்திரனை இன்று முற்பகல் 9.00 மணிக்கும், ‘பொன்மாஸ்டர்’ என அழைக்கப்படும் செல்லத்துரை பொன்குணரத்தினத்தை பிற்பகல் 2.30 மணிக்கும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவீரர் துயிலும் இல்லங்களை மக்களிடம் கையளிப்பதற்கும், நினைவுகூரும் உரிமையை அரசு தடுக்காது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் தெரிவித்து வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாகப் பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்புகளுக்கும் களத்தில் இடம்பெறும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!