வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு கோரும் மனு, இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
மனுவை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்துக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.




