வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு

வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வருக்கான ஆடை ஆகியவை காணாமல் போனதாக மாநகர சபை செயலாளரால் கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வவுனியா ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து மாநகர சபைக்குரிய செங்கோல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னாள் மேயரின் அறிவுறுத்தலின் பேரில் அவரது நண்பர் ஒருவர் குறித்த இடத்திற்கு சென்று செங்கோலை ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் நேற்று பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதனை வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த செங்கோல் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் மேயர், பெண் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் சொகுசு வாகனத்தையும் பொலிஸார் தேடி வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




