இலங்கை

எரிபொருள் QR முறைமை மேலும் கடுமை

Desktop Image Mobile Image

இலங்கையில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும் எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் QR முறைமை மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், QR மற்றும் ஒதுக்கீட்டு (Quota) முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் பயன்பாடு ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கேற்ப குறையவில்லை என குறிப்பிட்டார்.

உலகளாவிய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்ந்துவரும் நிலையில், எரிபொருள் பயன்பாட்டை மேலும் கட்டுப்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் இலங்கை அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, ஜனவரி மாதத்தில் 186 மில்லியன் அமெரிக்க டொலரும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியன் அமெரிக்க டொலரும், மே மாதத்தில் மட்டும் 524 மில்லியன் அமெரிக்க டொலரும் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

இந்த நிலை தொடருமானால் அது தேசிய பொருளாதாரத்திற்கு நீடித்த சுமையாக மாறும் என எச்சரித்த அமைச்சர், டொலர் வெளியேற்றத்தை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

 

 

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து QR முறைமையின் அமுலாக்கத்தை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடி சூழ்நிலையில் QR முறைமையை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து தேசிய பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை தணிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Back to top button