வங்காள விரிகுடாவில் 36 நாட்கள் உயிர்ப்போராட்டம்; இலங்கை தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு

36 நாட்களுக்கும் மேலாக வங்காள விரிகுடா கடலில் உணவு மற்றும் குடிநீர் இன்றி உயிர்ப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர், பங்களாதேஷ் மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி இரவு, சோனாசார் கடற்பகுதியில் மிதந்துகொண்டிருந்த அவர்களை கொக்ஸ் பாசார் மாவட்டத்தின் மஹேஷ்காலி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கண்டுபிடித்து, தமது படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீன்களை உணவாக உட்கொண்டு உயிர் தப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் எவ்வாறு கடலில் சிக்கினர் மற்றும் உண்மையில் 36 நாட்கள் கடலில் தத்தளித்தார்களா என்பது குறித்து பங்களாதேஷ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.




