முல்லைத்தீவில் சோகம்; காட்டு யானையை காணொளி எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை காணொளியாக பதிவு செய்ய முயன்ற நபர் ஒருவர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (24.07.2026) மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, காட்டு யானையை அருகில் சென்று படம் பிடிக்க முயன்றபோது அது திடீரென தாக்கியதில் நபர் பலத்த காயமடைந்துள்ளார்.
அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றினர். எனினும், மாலை 4.00 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பூபாலசிங்கம் கமலேஸ்வரன் (49) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




