விளையாட்டு

அதிரடி வெற்றி பெற்ற இலங்கை: மேற்கிந்திய தீவுகளை 37 ஓட்டங்களால் வீழ்த்தியது

Desktop Image Mobile Image

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதிலும், நடுத்தர வரிசையில் களம் இறங்கிய கமில் மிஷார சிறப்பான பொறுப்புணர்வுடன் விளையாடி 40 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு துணையாக இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, 24 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினார்.

மிஷார மற்றும் ஷானக இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டமை இலங்கை இன்னிங்ஸின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

 

195 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களின் அழுத்தத்திற்கு உள்ளானது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர முக்கிய பங்காற்றினார். அவர் 3.1 ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேவேளை, வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தை சிதறடித்தனர்.

 

 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், அடுத்த போட்டிக்கான நம்பிக்கையையும் மேலும் அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button