இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.4.26 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

டுபாயிலிருந்து அகமதாபாத் நோக்கி பயணித்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.4.26 கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இண்டிகோ விமானம் நேற்று சுங்கத் துறை அதிகாரிகளால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, விமானத்தின் முன்பக்க கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி (Speaker) ஒன்றின் உள்ளே கருப்பு நிற பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு சந்தேகத்திற்கிடமான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பொதிகளை சோதனை செய்த அதிகாரிகள், அவற்றிலிருந்து 2.7 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்தை மீட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 4.26 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பொறியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையின் போதே இந்த கடத்தல் முயற்சி அம்பலமானதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்கம் விமானத்திற்குள் எவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து சுங்கத் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




