உலக செய்திகள்செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – ஹோர்மூஸ் பதற்றம் தீவிரம்

Desktop Image Mobile Image

ஹோர்மூஸ் நீரிணையை மையமாகக் கொண்டு அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், தெற்கு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா இன்று பரவலான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களின்படி, தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த தாக்குதலின் இலக்குகளாக அமைந்துள்ளன. இப்பகுதிகள் ஈரானின் கடற்படை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதப்படுகின்றன.

அமெரிக்கப் படைகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையில், ஈரானின் ரேடார் கண்காணிப்பு அமைப்புகள், ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பிற இராணுவ உள்கட்டமைப்புகள் உட்பட சுமார் 80 இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த மோதலுக்கான பின்னணி கடந்த பெப்ரவரி மாதம் உருவானது. அப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளை நோக்கி ஈரான் பதிலடி நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதன் பின்னர், உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையின் போக்குவரத்தில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்தது.

பின்னர் பாகிஸ்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளின் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றத்தை குறைக்கும் நோக்கில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் அறவிடப்படும் என்றும், ஈரானின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற சில சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியானது. இந்தச் சம்பவங்கள் மீண்டும் அமெரிக்கா–ஈரான் உறவில் பதற்றத்தை அதிகரித்தன.

இதற்கிடையில், ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ள லிமாஹ் கடற்பகுதிக்கு அருகில் ஹோர்மூஸ் நீரிணையை நோக்கிச் சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மேலும் சிக்கலடையும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதேவேளை, இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகம், கடல் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் புதிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

Related Articles

Back to top button