
கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்று இன்று (03) அதிகாலை பொல்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அவர்கள் கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொல்பிட்டிய பொலிஸார், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




