
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் – சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்று (18) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஏற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், வழமைபோன்று இம்முறையும் சாட்டியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்கு தனிநபர் ஒருவர் உரிமை கோரியுள்ளதுடன், அக்காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்குமாறு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் விசாரணை நாளை (20) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நீதிமன்றக் கட்டளை தமக்குச் சாதகமாக அமைந்தால் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியில் நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், எதிராக அமைந்தால் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!