அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

ஈரானிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் எல்லைப் பகுதிக்குள் குறித்த ஆளில்லா விமானம் நுழைந்ததாக கண்டறியப்பட்டதையடுத்து, அது விரோத இலக்காக அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரானிய இராணுவ அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா எதிர்காலத்தில் ஏதேனும் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டால் அதற்கு தகுந்த பதிலடி வழங்கும் உரிமை ஈரானுக்கு இருப்பதாகவும் IRGC எச்சரித்துள்ளது.
அமெரிக்கா அண்மையில் ராக்கெட் ஏவுதளங்களை குறிவைத்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பின்னர் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
MQ-9 ரீப்பர் என்பது நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட அமெரிக்காவின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறன் வாய்ந்த ஆளில்லா விமானமாகும். இது முன்னரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




