நாட்டில் 203 பேருக்கு மூளைக்காய்ச்சல் தொற்று – சுகாதார அமைச்சு தகவல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் வயது மற்றும் நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கழுத்து இறுக்கம், வாந்தி, ஒளி எரிச்சல், மயக்கம், அதிக தூக்கநிலை, குழப்பம், வலிப்பு மற்றும் உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.
சிலருக்கு தோலில் சிரங்கு அல்லது சிவப்பு புள்ளிகளும் தோன்றக்கூடும்.
குழந்தைகளில் தொடர்ந்து அழுதல், பால் அல்லது உணவு அருந்த மறுத்தல், அதிக சோர்வு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




