
அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள் இனிமேல் இருக்கைப் பட்டி தொடர்பான விதியை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாகும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
புதிய விதி அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைப் பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருக்கைப் பட்டி அணியாத நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகளிலும் இந்த விதி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருக்கைப் பட்டி அணியாமல் பயணிக்கும் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருக்கைப் பட்டியின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்துக்களில் இருக்கைப் பட்டி பயன்படுத்தப்படாததன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய விடயமாக, இருக்கைப் பாதுகாப்புப் பட்டைகள் இல்லாத வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது என தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் புதிய விதியை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




