ஈரான் மீது அமெரிக்காவின் பதிலடி ஏவுகணைத் தாக்குதல்

ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா இன்று (19) ஈரான் மீது பதிலடி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் குவாசம் (Qeshm) தீவு உள்ளிட்ட பல முக்கிய இராணுவ மற்றும் மூலோபாயப் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்ததுடன், அந்த வழியாகச் சென்ற சில வர்த்தகக் கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஏழு நாட்களாக இரு தரப்புக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.




