கொழும்பு புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக மொரகஸ்முல்ல, இராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அவசர திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பில், குறித்த பகுதிகளில் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தப்பணிகள் எதிர்பார்த்ததை விட முன்னதாக நிறைவடைந்ததால் இன்று (05.06.2026) மாலை 6.00 மணியளவில் நீர் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் தற்போது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




