லங்கா சதொச மூலம் 25 அத்தியாவசிய பொருட்கள் நேரடி இறக்குமதி – விலை கட்டுப்பாடு நடவடிக்கை

பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 25 அத்தியாவசிய நுகர்பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசேகர இதுகுறித்து தெரிவிக்கையில், சந்தையில் தற்போது கிடைக்கும் சில அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறினார்.
மேலும், வர்த்தக சந்தையில் இடைத்தரகர்கள் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை குறைத்து, நுகர்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை தணிப்பதே இந்த நேரடி இறக்குமதி நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் மூலம் அத்தியாவசிய பொருட்களின் கிடைப்புத் தன்மை மற்றும் விலை நிலைத்தன்மை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




