நாடு பூராகவும் இன்று 21 மே தின நிகழ்வுகள்

சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் 21 கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களை உள்ளடக்கியதாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மே கூட்டங்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நுவரெலிய மாநகர சபை மைதானத்திலும், மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் வேளையிலும் நடைபெற உள்ளன.
அதேநேரம்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
உருட்டு பிரட்டு திருட்டு’ என்னும் தொனிப்பொருளில் இந்த மேதினக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
இம்முறை மேதின பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மேதினக்கூட்டத்தை நடத்தாது இருக்க தீர்மானித்துள்ளது.
இருப்பினும் மேதின நிகழ்வுகளின் ஒரு அங்கமாக மறைந்த தலைவர் டீ.பீ.இலங்கரத்னவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரல உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு இடம்பெறவுள்ளது.
‘ஊழல் மிகு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம்’ என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்திற்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து மேதினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
மேலும் முன்னிலை சோசலிச கட்சியினர் ‘ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்திற்கு அடிபணிந்தாடும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அதிகாரம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியினர் கொழும்பு-05, ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் நடத்தவுள்ளனர்
‘அபிவிருத்தி அடையும் இலங்கைக்காக’ எனும் தொனிப்பொருளில் இந்த மே தினக் கூட்டம் நடத்தவுள்ளது.
அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, இன்று பிற்பகல் 2 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ.ஈ குணசிங்க மைதானத்தை சென்றடையவுள்ளது.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினக்கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் இம்முறை பிராதன எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலான எதிரணியில் உள்ள முக்கிய கட்சிகள் மேதின பேரணியை இம்முறை நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




