இந்தியா

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

Desktop Image Mobile Image

மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், கிராமிய சினிமாவின் முன்னோடியாகவும் போற்றப்பட்ட பாரதிராஜாவின் மறைவு கலைத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பாரதிராஜாவின் திரைப்பணிகளையும் அவரது பங்களிப்பையும் பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றவர்.

 

 

பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் மகத்தான பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுவதுடன், அவரது இறுதிச்சடங்கில் திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button