கடல் எல்லைப் பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்கிறார் கடற்றொழில் அமைச்சர்

இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து, இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களை பாதித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினை குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடல் எல்லை மீறல்கள் குறைவடைந்திருந்தாலும், எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய எல்லை மீறல்களைத் தடுக்க இலங்கை கடற்படையின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அதேநேரத்தில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திரைப்படங்களில் நீதிக்காகப் போராடும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த விஜய், அரசியல் தலைவராகவும் அதே நேர்மையுடன் செயல்படுவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அமைச்சர் கூறினார்.
இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களின் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த நீண்டகால பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை எட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.




