கிளிநொச்சியில் கொடூர விபத்து; இளம் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிளிநொச்சி – கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகலில் இடம்பெற்ற கொடூர மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரம் பகுதியிலிருந்து கரடிபோக்கு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், பாடசாலை முடிவடைந்த தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கரடிபோக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் பெரிய ரக ரேசிங் மோட்டார் சைக்கிளில் அந்த வீதியில் அதிக வேகத்தில் பயணித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடுமையான மோதலால் இளம் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




