அணு ஆயுதத் திறன் கொண்ட ‘காங்கோன்’ போர்க்கப்பலை மீண்டும் களமிறக்கிய வடகொரியா

வடகொரியா தனது இராணுவ வலிமையை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அணு ஆயுதத் திறன் கொண்டதாகக் கூறப்படும் ‘காங்கோன்’ அதிநவீன போர்க்கப்பலை மீண்டும் கடற்படை சேவைக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், இந்த போர்க்கப்பலில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி அமைப்புகளின் சோதனைகளை பார்வையிட்டுள்ளார்.
சர்வதேச தடைகள் தொடர்ந்தும் அமலில் உள்ளபோதிலும், வடகொரியா தனது பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதத் திட்டங்களை வேகமாக முன்னெடுத்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான சுமார் 5,000 தொன் எடையுடைய ‘காங்கோன்’ போர்க்கப்பல் நீண்டகால பழுதுபார்ப்பு பணிகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த போர்க்கப்பலை முழுமையான இராணுவப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முன்னேற்றம், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளது.




