இலங்கை

நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூட உத்தரவு

Desktop Image Mobile Image

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பொசன் பூரணை போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நேரம் முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை திறக்கப்படும் நேரம் வரை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு அனுஷ்டிக்கப்படும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை குறிப்பிட்ட நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை செயல்பட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை 1913 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், விதிமுறைகளை மீறும் மதுபானசாலை உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி ஆணையாளருமான ஏ.ஏ. ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button