இலங்கை

தொலைந்த கையடக்கத் தொலைபேசிகள் குறித்து பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Desktop Image Mobile Image

நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகளவில் கிடைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொலைந்து போகும் அல்லது திருடப்படும் தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் செல்வதால், உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி தொடர்பான தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் பல்வேறு சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தொலைபேசி காணாமல் போனவுடன் உடனடியாக தொடர்புடைய சேவை வழங்குநரை தொடர்புகொண்டு சிம் அட்டையை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

மேலும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது, தொலைபேசியின் IMEI எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMEI எண்ணை அறிய *#06# என்ற எண்ணை அழுத்தி பார்க்கலாம் எனவும், தொலைந்த மொபைல்களை கண்டறிய இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள I Need Sri Lanka Police Portal இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிறருக்குச் சொந்தமான மொபைல்களை தன்னிடம் வைத்திருப்பது ‘குற்றவியல் முறைகேடு’ எனக் கருதப்படுவதுடன், அதற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

அதேவேளை, திருடப்பட்ட மொபைல்களை மலிவான விலையில் வாங்கி பயன்படுத்துவதும் குற்றமாகும் என்றும், அதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை கையடக்கத் தொலைபேசிகளை வாங்கும் முன், அவை திருடப்பட்டவை அல்ல என்பதை I Need முறைமையின் “Find Genuine Phone” வசதியின் மூலம் சரிபார்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான முறையில் மொபைல்கள் வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button