
இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மிகவும் வலுவான கட்டத்தை எட்டும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் ‘எல் நினோ’ நிலைமை, ஆண்டு இறுதிக்குள் கணிசமாக வலுப்பெறக்கூடும் என்றும், இதற்கான சாத்தியம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக சர்வதேச காலநிலை கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என்றும், குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை அறிகுறிகளின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திலும் மழைவீழ்ச்சி குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் Typhoon போன்ற சக்திவாய்ந்த சூறாவளிகள் உருவாகும் பட்சத்தில், காலநிலை மாறுபட்டு தென்மேற்கு பருவக்காற்று வலுப்பெறுவதன் மூலம் நாட்டிற்கு கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக அஜித் விஜேமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்வரும் மாதங்களில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பொதுமக்கள் தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




