மழை அங்கியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் கோரல்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் போது நேற்று (23) அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் எலும்புக்கூடு, நிபுணர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்து எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் இதனைத் தெரிவிக்கையில், குறித்த எலும்புக்கூடு சட்ட ரீதியாக அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால், அதனை அகழ்ந்து எடுக்கும் முன் தடயவியல் உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த எலும்புக்கூடு தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் நீதிமன்ற பதிவாளர் அல்லது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கோ, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ தகவல்களை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த எலும்புக்கூடு தொடர்பான தகவல்கள் கிடைக்குமாயின், செம்மணி மனித புதைகுழி அகழாய்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளில் மேலதிக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.




