40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி

வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக இன்று (15) கள்ளிக்குளம் பிரதேசத்திற்கு சென்ற ஆளுநர், அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.
இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் காணப்படும் 8 கிலோமீற்றர் நீளமான கள்ளிக்குளம் பிரதான வீதி தொடர்பில் மக்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
சுமார் 800 குடும்பங்கள் பயன்படுத்தும் இந்த வீதி, இரண்டு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் முக்கியமானதாக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வீதியின் மோசமான நிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கள்ளிக்குளம் பிரதான வீதியை இரண்டு கட்டங்களாக புனரமைப்பதற்கான நிதியை பிரதேச சபைக்கு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், முறையான பேருந்து சேவை இல்லாமை, யானை வேலி அமைக்க வேண்டிய தேவை, காணி உரிமை மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் மக்கள் ஆளுநரிடம் முன்வைத்துள்ளனர்.
வனவளத் திணைக்களத்தினால் தங்களது வயற்காணிகளில் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த காணிகளில் தலையீடுகள் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். புதிய குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படாமை மற்றும் வீடமைப்பு வசதிகள் தொடர்பான தேவைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிராமத்தில் வசிக்கும் 18 மாற்றுத்திறனாளிகள் இணைந்து சுயதொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கட்டட வசதி இல்லாததால் சேதமடைந்த சனசமூக நிலையத்தை புனரமைத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை சாதகமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடுகளுக்கான மின் இணைப்புகளை மாற்றித் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஆளுநர், ஒவ்வொரு பிரச்சினையையும் உரிய வகையில் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கள்ளிக்குளம் பகுதிக்கு நேரில் அழைத்து வந்து, பிரச்சினைகளை களத்தில் வைத்து ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கள விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுதாகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!



