ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடங்களில் ஒன்றை தற்காலிகமாக மூடியுள்ளது.
சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு – மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து சவூதி அரேபிய எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய மாற்று வழித்தடமாக விளங்குகிறது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய் வழித்தடம் மூடப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (10) ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல ட்ரோன்கள் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை ஈராக் அரசாங்கமும் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாப்-எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகள் தொடர்பிலும் ஹௌதி அமைப்பினர் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கப்பல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாப்-எல்-மண்டேப் நீரிணை, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் சர்வதேச எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சவூதி அரேபியா தற்காலிகமாக மூடியுள்ள குழாய் வழித்தடத்தின் ஊடாக கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 மில்லியன் கொள்கலன் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குழாய் வழித்தடத்தின் தற்போதைய நிலைமை குறித்து பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர். குழாய் மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




