
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பரப்புகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், அக்காலப்பகுதியில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




